கவின் கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மகனை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி
திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சரவணனையும் அவரது மகன் சுர்ஜித்தையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞர், மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27ஆம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கவினின் காதலியாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுர்ஜித்தின் பெற்றோரான சிறப்பு காவல்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணைத் தேவைக்காக சுர்ஜித் மற்றும் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீசார் திருநெல்வேலி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஹேமா முன்னிலையில் இன்று இந்த மனு விசாரிக்கப்பட்டது.
இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இரு தரப்பின் வாதங்களுக்குப் பிறகு, சுர்ஜித்தையும் சரவணனையும் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி, விசாரணை முடிந்ததும் நாளை மறுநாள் மாலை 6 மணிக்குள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.