அதிமுக உள்கட்சி கருத்து வேறுபாடு மற்றும் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது முடிவை அறிவிக்கும் என்பதைத் தெளிவுபடுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படக் கூடாது என்றும் கோரி ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனுவை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர். இந்த மனுவின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கெதிராக பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தேர்தல் சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இதனை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.

இந்நிலையில், 7 வாரங்கள் கடந்தும் தேர்தல் ஆணையம் தன் அதிகார வரம்பு குறித்த முடிவை எட்டவில்லை என்பதைக் குற்றம் சாட்டிய பழனிசாமி தரப்பு, விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயம் செய்யக் கோரி புதிய மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவுக்கு இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனுவின் விசாரணை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் கே.சுரேந்தர் அமர்வில் நடைபெற்றது. பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணும், தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலனும் ஆஜரானனர். தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் கேட்டதை அடுத்து, விசாரணை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Facebook Comments Box