துஷார் ரஹேஜா சதம் விளாசல்: சேப்பாக் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி
டிஎன்பிஎல் 2026 தொடரில் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் துஷார் ரஹேஜா சதம் விளாசியதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஆஷிக், 56 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் விளாசி, சதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார்.
சேப்பாக் அணிக்காக நாராயண் ஜெகதீசன் 27 ரன்களும், அஷ்வத் வல்தப்பா 28 ரன்களும், வசீம் அகமது 16 ரன்களும் சேர்த்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணியின் பந்துவீச்சில் ரகுபதி சிலம்பரசன் மற்றும் மோகன் பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நடராஜன், சாய் கிஷோர் மற்றும் இசக்கிமுத்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து 206 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்களை குவித்து, இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
திருப்பூர் அணியின் வெற்றியில் துஷார் ரஹேஜா முக்கிய பங்கு வகித்தார். அவர் 52 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசி சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக பிரதோஷ் ரஞ்சன் பால் 41 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் சேர்த்தார்.
அதிரடி சதம் விளாசி திருப்பூர் தமிழன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த துஷார் ரஹேஜா, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.



