சினிமாவின் ஆரம்பக் காலகட்டத்தில் உருவான புராண, சரித்திரக் கதைகள் அதிகம். அதேசமயம், பெண்களை மையப்படுத்தியும் பாலியல் சார்ந்த விஷயங்களையும் கொண்ட சில திரைப்படங்கள் உருவாகின. அவற்றில் ஒன்று ‘தாஸி அபரஞ்சி’. தேவதாசிபெண்ணை மையமாகக் கொண்ட இந்தப் படம், அந்தக் காலத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தியது. சில பத்திரிகைகள் இதைத் துணிச்சலான படமாகப் பாராட்டின.
உஜ்ஜைனியில் ஆட்சி புரிபவர் விக்கிரமாதித்தன் என்ற மன்னன். அங்குள்ள மகதபுரி எனும் ஊரில் அபரஞ்சி என்ற பேரழகிய தேவதாசி வாழ்கிறாள். 64 கலைகளிலும் தேர்ச்சி பெற்றவள்; தன்னைப் பற்றிய பெருமை கொண்டவள். யாராவது தன்னை நினைத்தால்கூட ஆயிரம் பொற்காசுகள் கூலியாகக் கேட்பவள். ஆனால் பக்தியுள்ளவளான அபரஞ்சி கைலாசம் செல்ல வேண்டும் என இறைவனை தினமும் பிரார்த்தனை செய்கிறாள்.
மன்னன் விக்கிரமாதித்தன் ஆறு மாதம் காட்டில் தியானம் செய்வது வழக்கம். அவருடன் அமைச்சர் விஜயனும் ராணி பத்மாவதியும் செல்வர். நயவஞ்சகனான விஜயனுக்கு நாட்டின் மீதும் ராணியின் மீதும் ஆசை. மன்னனுக்கும் விஜயனுக்கும் மற்றொருவரின் உடலுக்குள் புகும் அதிசயக் கலை தெரியும்.
ஒருநாள் விஜயன் ஒரு கிளியைக் கொன்று போலியாக அழுகிறான். அதை பார்த்து மனம் இளகும் மன்னன் தன் உடலைவிட்டு கிளிக்குள் புகுந்து அதற்கு உயிர் கொடுக்கிறான். இதை பயன்படுத்திக் கொள்கிற விஜயன், ராஜாவின் உடலுக்குள் புகுந்து அவரது உருவத்தில் அரண்மனைக்கு திரும்புகிறான்.
இப்போது ராஜாவின் உயிர் கிளிக்குள் உள்ளது. அந்தக் கிளியை வேட்டைக்காரன் பிடித்து பணக்காரனான பஞ்சாயத்து தலைவர் தனபாலிடம் விற்றுவிடுகிறான். புத்திசாலியான அந்தக் கிளி தனபாலுக்கு வழக்குகளைத் தீர்க்க உதவுகிறது. சிக்கலான வழக்குகளுக்கும் எளிதாகத் தீர்வுச் சொல்கிறது.
ஒருநாள் விசித்திரமான வழக்கு ஒன்று வருகிறது — ஏழை பூசாரி ஒருவருக்கு அபரஞ்சி மீது ஆசை வருகிறது. ஆனால் கூலி கொடுக்க முடியாத ஏழை அவர், வசிய மருந்து செய்து வேலைக்காரி மூலமாக அபரஞ்சியிடம் கொடுக்கிறார். ஆனால் அந்த வேலைக்காரி தானே அதை சாப்பிடுகிறாள்.
இதேநேரம் அபரஞ்சி தன்னைத் தேடி வருவார் எனக் காத்திருக்கும்பூசாரி அவர் வராததால் தூங்கிவிடுகிறார். கனவில் அபரஞ்சி வருகிறார்; அது உண்மையாகவே தோன்றுகிறது பூசாரிக்கு. மறுநாள் அதை நண்பர்களிடம் சொல்கிறார். அதைக் கேட்டு அபரஞ்சி ஆயிரம் பொற்காசுகளைக் கேட்கிறார். பணமில்லாத பூசாரியை தனபாலிடம் இழுத்துச் செல்கிறார்.
அப்போது கிளி அற்புத தீர்ப்பு ஒன்றைச் சொல்கிறது: கண்ணாடியைக் கொண்டு வரச் சொல்கிறது. அதில் பொற்காசுகள் பிரதிபலிக்கின்றன. “பூசாரி உன்னை கனவில் மட்டுமே சந்தித்தார். ஆகவே கண்ணாடியில் பிரதிபலிக்கும் பொற்காசுகளைக் கூலியாக எடுத்துக் கொள்,” என்கிறது. அதற்கு எதிராகக் கோபப்படும் அபரஞ்சி கிளியைக் கொன்று விடுவதாகச் சபதம் செய்கிறாள். அது நிறைவேறியதா? கைலாயம் செல்லும் கனவு நனவானதா? — அதுவே கதை.
அபரஞ்சியாக புஷ்பவல்லி நடித்தார். ‘சம்பூர்ண ராமாயணம்’ (1936) படத்தில் சிறுவயது சீதாவாக அறிமுகமான இவர், பின்னர் மிஸ் மாலினி, சக்ரதாரி, வேலைக்காரி மகள் போன்ற படங்களில் நடித்தார். இவர் காதல் மன்னன் ஜெமினிகணேசனின் இரண்டாவது மனைவியாவார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
கொத்தமங்கலம் சுப்பு ஏழை பூசாரியாகவும், எம்.எஸ். சுந்தரிபாய் வேலைக்காரி சிங்காரியாகவும், எம்.கே. ராதா மன்னனாகவும், எம்.ஆர். சுவாமிநாதன் விஜயனாகவும் நடித்தனர். கொத்தமங்கலம் சீனு, புலியூர் துரைசாமி ஆகியோரும் நடித்தனர்.
பி.என். ராவ் இயக்கிய இந்தப் படத்தை எஸ்.எஸ். வாசன் ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் தயாரித்தார். பி.எஸ். ரங்கா ஒளிப்பதிவு செய்தார். இசை: எம்.டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வர ராவ். கதை, வசனம், பாடல்கள் — அனைத்தையும் எழுதி துணை இயக்குநராகவும் பணியாற்றினார் கொத்தமங்கலம் சுப்பு.
‘காணவேண்டும் கயிலையை…’, ‘ஆசைக் கொள்ளாதவர் ஆண்பிள்ளையோ..?’, ‘வேலைக்கார கேலி பிழைப்பு’, ‘ஆசையா என் மேல் ஆசையா?’, ‘ஆசையினால் வரும் துன்பம்’ உள்ளிட்ட 15 பாடல்கள் இருந்தன.
1944 ஆகஸ்ட் 10 அன்று வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றதுடன், அக்காலத்தில் பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.