பிஹார் முதல் கட்ட தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு
243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைவதால், அரசியல் கட்சிகள் தீவிர வேட்புமனு தாக்கல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் தேர்தல் களமுரசு முழங்க, பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.
பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி, முங்கேர் மாவட்டத்தின் தாராபூர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், புதிய கட்சியான ஜன சக்தி ஜனதா தளம் அமைப்பாளருமான தேஜ் பிரதாப் யாதவ், வைசாலி மாவட்டம் மகுவா தொகுதியில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் காலக்கெடு நிறைவடையவுள்ளதால், முக்கிய கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்புகள் இன்று மாலை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.