விமானியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு: அகமதாபாத் விமான விபத்து விசாரணை பாரபட்சமாக உள்ளது என குற்றச்சாட்டு
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் விமானத்தில் 241 பயணிகள் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். அந்த விமானத்தின் விமானியாக இருந்த மறைந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை புஷ்கர் ராஜ் சபர்வால், இந்த விபத்து குறித்து நடந்து வரும் விசாரணை பாரபட்சமாக உள்ளது என கூறி, நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) இணைந்து மனுதாரராக இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 32 இன் கீழ் அக்டோபர் 10 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனுவில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விமான நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து, நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) மேற்கொண்டு வரும் விசாரணையை நிறுத்தி, அந்தப் பதிவுகள் அனைத்தையும் புதிய குழுவுக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர்கள் கேட்டுள்ளனர்.
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கை “குறைபாடுள்ளது, பாரபட்சமானது மற்றும் முழுமையற்றது” என அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காரணம் — அந்த அறிக்கையில் விபத்துக்கான காரணம் ‘விமானியின் பிழை’ என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, உண்மையில் ஏற்பட்ட கடுமையான தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட முக்கிய காரணிகள் பற்றி எந்தவிதமான ஆராய்ச்சியும் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரர்கள், ஒரு சுயாதீன நிபுணர் தலைமையிலான விசாரணையால் மட்டுமே உண்மையான பொறுப்புணர்வை உறுதி செய்யவும், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்து இல்லாத பறப்புகளையும், 15,000 மணி நேர விமானப் பணி அனுபவத்தையும் பெற்றிருந்த கேப்டன் சபர்வால், போயிங் 787 விமானங்களின் இயக்கத்தில் அனுபவம் வாய்ந்தவர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய விசாரணை, விபத்தில் உயிரிழந்த விமானிக்கு எதிராக பாரபட்சமாக நடைபெறுகிறது; இது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு, விபத்துக்கான உண்மையான காரணத்தை அடையாளம் காணத் தவறி, பொது பாதுகாப்புக்கு ஆபத்தாக உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.