தனது பதவியை ராஜினாமா செய்ததை திமுக தலைமையிடம் கூறிவிட்டேன் என தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சமபலத்தில் உள்ளனர். ஆளுங்கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்களும், எதிர்கட்சிகளுக்கு நியமன உறுப்பினர்கள் 3 பேர் உள்பட 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதனால் புதுச்சேரி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது என்றும், சட்டப்பேரவையில் உடனே கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மன அளித்திருந்தனர். 
இந்நிலையில், புதிய ஆளுநர் பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன் நாளை சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நாராயணசாமிக்கு உத்தரவிட்டார். அதன்படி நாளை சட்டப்பேரவை கூடுகிறது. இந்நிலையில், இன்று புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராணயன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்திடம் அளித்தார்.
இதனையடுத்து,  திமுக எம்எல்ஏ வெங்கடேசன் கூறுகையில்;- புதுச்சேரி அரசால் தட்டாஞ்சாவடி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை.  எனக்கு எந்த வித அழுத்தமும் கிடையாது. தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்குகேட்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை திமுக தலைமையிடம் கூறிவிட்டேன் என்றார். தற்போது நான் திமுகவில் தான் உள்ளேன். எம்எல்ஏ பதவியை மட்டும்தான் ராஜினாமா செய்துள்ளேன் என தகவல் தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box