சேலம்: கழிவுநீர் திட்டப் பணியில் குடிநீர் குழாய் சேதம் – மூன்று நாட்களாக வீணாகும் தண்ணீர்
சேலம் மாநகரப் பகுதியில் மேட்டூர் கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட சேதத்தால், கடந்த மூன்று நாட்களாக குடிநீர் சாலைகளில் ஓடி பெருமளவில் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொண்டலாம்பட்டி 48-வது வார்டிலிருந்து 60-வது வார்டு வரை உள்ள குடியிருப்புகளுக்கு, மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெத்திமேடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது, எதிர்பாராத விதமாக குடிநீர் குழாய் உடைந்தது. இதன் விளைவாக கடந்த மூன்று நாட்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் பாய்ந்து வீணாகி வருகிறது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட 12 வார்டுகளில் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் விநியோகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.