வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்னும் சில மணி நேரங்களில் மேலும் வலுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் இந்த ஆழ்ந்த தாழ்வு பகுதி, வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மண்டலமாக வளரக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்றும், நாளை அரியலூர், கடலூர் மாவட்டங்களிலும் பெருமழை ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 29ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் பகுதிகளுக்கு மிக கனமழை ஏற்படக்கூடும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.