சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தை, தொடர்ச்சியான கனமழையால் சேறும், சகதியுமாக மாறி பயிர் விற்பனைக்கு தகாத நிலைக்கு சென்றுள்ளது. நுழைவாயில் முதல் சந்தையின் உள் பகுதிகள் வரை அனைத்திலும் மழைநீர் தேங்கி, வியாபாரிகளும் விவசாயிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மழைநீர் சரியாக வடிகாலில் செல்லாததால் காய்கறி மூட்டைகளை இறக்கவும் ஏற்றவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த சந்தைக்கு வருவதால் இத்தகைய சேறும் சகதியும் நிரம்பிய சூழல் அவர்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது.
சந்தையின் சீரமைப்பு இன்றியமையாதது என்று தமிழ்ஜனம் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியானது. இதன் பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் எனக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விவசாயிகளின் முக்கிய வருமான மூலமாக இருக்கும் இந்த சந்தையை அரசு விரைவாக சீரமைக்க வேண்டும் என விற்பனையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.