மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விற்கப்படும் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை செய்துள்ளது.
மதுரை மாவட்டத் தலைவர் எம். சோலை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கோயில் வளாகத்தில் கோயில் நிர்வாகம் நேரடியாக விற்பனை செய்கின்ற சர்க்கரை பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், லட்டு, முருக்கு, புட்டு போன்ற பிரசாதங்களின் விலை நேற்று முதல் 50% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.10க்கு விற்கப்பட்ட பொருட்கள் ரூ.15ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தியடைவதாக அவர் தெரிவித்தார்.
சபரிமலை சீசன் காரணமாக தமிழகத்திலும், வெளிமாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய வருகிற சூழலில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விலை உயர்த்தியிருப்பது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
கோயில் நிர்வாகம் 2011ல் விலை உயர்த்தியதை காரணமாக கூறி மீண்டும் உயர்த்துவது பொருத்தமற்றது என்றும், தனியார் உணவகங்களின் விலையை ஒப்பிடுவது தகுந்த காரணம் அல்ல என்றும் அவர் விமர்சித்தார்.
பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளும் நிலையான வருமானங்களும் இருக்கும் இந்தப் பெரிய கோயிலை தனியார் ஹோட்டல்களுக்கு ஒப்பிட முடியாது; ஏழை மற்றும் நடுத்தர பக்தர்களுக்கு கூட சலுகை வழங்காமல், விலையை ஏற்றுவது எப்படி நியாயம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும்,
அரசு கட்டுப்பாட்டில் இல்லாத பிற மதஸ்தலங்களுக்கு பல இலவச வசதிகளை வழங்கும் அரசு, தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மட்டும் கட்டுப்பாடுகளையும் விலை உயர்வுகளையும் விதிப்பது ‘திராவிட மாடல் அரசு’ என்ற பெயருக்கு எதிரான செயலாக உள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, சபரிமலை சீசனைக் கணக்கில் கொண்டு வணிக நோக்கத்திற்காக உயர்த்தப்பட்ட இந்த விலை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். பக்தர்கள் நலனைக் கருத்தில் கொண்டு முந்தைய விலையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இல்லையெனில் சட்டப்பூர்வமான போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.