1903ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலாறு பெருவெள்ளத்தில் உயிரிழந்த 200க்கும் மேற்பட்டோர் மற்றும் பாலாறு உரிமைக்காக போராடியவர்களை நினைவுகூரும் 122ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று வாணியம்பாடியில் நடைபெற்றது.
கர்நாடக மாநில நந்தி மலையில் தோன்றி, கோலார் மாவட்டம் வழியாக 90 கி.மீ. பாயும் பாலாறு, ஆந்திர மாநிலத்தில் 30 கி.மீ. பயணித்து, தமிழ்நாட்டின் புல்லூர் வழியாக நுழைந்து 222 கி.மீ. தொலைவு ஓடி செங்கல்பட்டு மாவட்டம் மயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.
1903ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட பேத்தமங்கலா அணை உடைந்ததில் ஏற்பட்ட வெள்ளம், நவம்பர் 12ஆம் தேதி நள்ளிரவில் திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடியை சூழ்ந்தது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். அதோடு, 3,000க்கும் மேற்பட்ட கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டன.
இந்த பேரழிவு, ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நடந்த மிகப்பெரிய இயற்கை விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்நேரத்தில் இந்தச் சம்பவம் குறித்து லண்டன், இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. மேலும், விக்டோரியா மகாராணிக்கு தந்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு, இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி நகரின் பாலாற்றங்கரையில் வெள்ள அளவை நினைவூட்டும் வகையில் வாரச்சந்தை மைதானம் அருகே நினைவு தூண் ஒன்றும் பின்னர் அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12ஆம் தேதி, பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாலாறு உரிமைக்காக போராடியவர்களுக்கும் பாலாறு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு, விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில், பாலாறு போராளிகள் எம்.எம். பஷீர் அகமது, பொறியாளர் நடராஜன், விவசாய சங்கத் தலைவர் சி.கே. தனபால், மாநிலச் செயலாளர் ஏ.சி. வெங்கடேசன் ஆகியோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு, புதிய நினைவு தூண் திறப்பு விழா நடைபெற்றது.
முன்னதாக பேருந்து நிலையத்திலிருந்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி, வாணியம்பாடி நகராட்சி மன்றத் தலைவர் உமா பாய், கவுன்சிலர் சாரதி குமார், பாலாறு ஆர்வலர்கள் அம்பலூர் அசோகன், விவசாய சங்கச் செயலாளர் இரா. முல்லை, மற்றும் பலர் பங்கேற்று மூக்கமூடி அஞ்சலி செலுத்தினர்.