முல்லை பெரியாறில் புதிய அணை: மாநில உரிமையை நிலைநாட்ட இ.கம்யூ. கோரிக்கை

முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொண்டு மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணையின் வலுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலைமையில் குழு அமைத்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் முல்லைப் பெரியாறு அணை போதுமான வலுவுடனும், உறுதியோடும் இருப்பதும், நில நடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும், அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கினாலும் பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது.

அறிவியல் அடிப்படையிலும், சட்ட பூர்வ முறையிலும் தீர்வு கண்டுள்ள முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து வலுத்தன்மை குறித்து எழுப்பும் கற்பனையான கருத்துகளை கேரள அரசு அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், கேரள பாதுகாப்பு பிரிகேட் என்கிற தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை அக்.13-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையை வலுப்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கலாம், நிபுணர்கள் குழு அமைக்கலாம், புதிய அணை கட்டும் சாத்தியக் கூறுகளை ஆராயலாம் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை, தமிழக அரசு சட்ட ரீதியாக, உறுதியாக எதிர்கொண்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box