கரூர் நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் விடுவிப்பு – நீதிமன்ற உத்தரவு
கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால், கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு வழங்க மறுத்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டது.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து கரூர் நகர போலீசார், தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த மதியழகனை தனிப்படை போலீசார் செப். 29-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கைது செய்தனர். ஆரம்ப விசாரணைக்கு பின், செப். 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிபதி இளவழகன் அக். 8-ம் தேதி தள்ளுபடி செய்தார். சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) 2 நாள் விசாரணை அனுமதி அளிக்கப்பட்டு, விசாரணை முடிந்ததும் மதியழகன் மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அதன்பின், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், புதிய காவல் நீட்டிப்பு குறித்து எஸ்ஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தவெக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, “விசாரணை அதிகாரம் இனி சிபிஐக்கு உள்ளது, எனவே எஸ்ஐடிக்கு காவல் நீட்டிப்பு கோரும் உரிமை இல்லை” என வாதிட்டனர்.
வாதங்களை கேட்ட நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி. பரத்குமார், எஸ்ஐடி சார்பில் வைக்கப்பட்ட காவல் நீட்டிப்பு கோரிக்கையை நிராகரித்து, வி.பி. மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தேவையான சட்டநடைமுறைகள் முடிந்ததும் விடுவிக்கப்படுவார்கள் என அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.