சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் லேசான மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 89.6 டிகிரி பாரன்ஹீட் அளவிலும், குறைந்தபட்சம் 78.8 முதல் 80.6 டிகிரி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஆய்வு:
சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை பெய்த நிலையில், இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசரகால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நாளை வடகிழக்குப் பருவமழை தொடங்கும் வாய்ப்பு:
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, நாளை (அக்டோபர் 16) முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும்.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்குப் பருவமழை நாளை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா பகுதிகளில் தொடங்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் குமரிக்கடல் நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால், வரும் 19ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகலாம்.
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.