அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல்கள் – 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உள்ளது

அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பான மனுக்களை விசாரிக்க விரைவில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையைச் சேர்ந்த திருக்குமரன் தாக்கல் செய்த மனுவில், கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

சரியான கூட்ட மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு இல்லாமை, உரிய நேரத்தில் கூட்டம் நடத்தாதது, பொதுமக்கள் பாதுகாப்புக்கான அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாதது, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் அவசர நடவடிக்கை திட்டம் இல்லாமை ஆகியவை அந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்தன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் கூட்டம் நடத்தும்போது அரசின் கட்டுப்பாடுகளை மீறாமல் செயல்பட வேண்டும். கூட்ட இடங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள், அவசர வசதிகள், அடிப்படை வசதிகள் போன்றவை கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படாத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கவும், குறுகிய இடங்களுக்குப் பதிலாக மக்கள் கூடும் பரப்பளவு அதிகமான இடங்களில் மட்டுமே அரசியல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தஞ்சாவூர் ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில், “அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் பதாகைகள், கட்சி கொடிகள், சுவர் விளம்பரங்கள் செய்யக் கூடாது. மேலும், அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், நிகழ்வை நடத்திய கட்சியே சேதங்கள், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி பூர்ணிமா கொண்ட அமர்வு விசாரித்தது. அவர்கள், “அரசியல் கூட்டங்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்படுவது தொடர்பான வழக்குகளை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி விரைவில் புதிய அமர்வு அமைக்கப்படும்; அதன் பின்னர் அரசியல் நிகழ்வுகள் குறித்த அனைத்து மனுக்களும் அதில் விசாரிக்கப்படும்” என தெரிவித்தனர்.

Facebook Comments Box