சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி பெருமிதம்

சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னை காரம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது: உணவு, உடை, இருப்பிடம் – இவை ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை தேவைகள். இதில் உடை, உணவு எல்லோருக்கும் கிடைக்கும். ஆனால் குடியிருக்கும் இடம் பட்டாவுடன் இருக்க வேண்டும் என்பதே இன்று மிகப்பெரிய பிரச்சினை.

வீட்டுக்குப் பட்டா இல்லாததால் ஏற்படும் பிரச்சினைகள்: மின் இணைப்பு பெற முடியாது, தண்ணீர் இணைப்பு எளிதாக கிடையாது, வங்கிக் கடன் பெற கடினம், எப்போது யார் வந்து இடத்தைக் காலி செய்யச் சொல்வார்கள் என்ற பதற்றம் கூடுதல் ஏற்படும்.

எனவே, சென்னை மற்றும் அருகே உள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். இதற்காக வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை மாவட்டத்தில் 1.40 லட்சம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் மொத்தம் 19 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பல முன்னேற்ற திட்டங்களின் மூலம், இந்தியாவில் தமிழகத்தின் வளர்ச்சி 11.19 சதவீதம் கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனால் திமுக அரசுக்கு ஒவ்வொரு நாளும் மக்களின் அன்பும் ஆதரவும் பெருகிக் கொண்டிருக்கிறது. “மக்களைத் தேடி அரசு வந்து கொண்டிருக்கிறது” என்று துணை முதல்வர் கூறினார்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், வருவாய்த் துறை செயலர் பெ.அமுதா, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் கணேசன், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box