நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரச்சார சுற்றுப் பயண பாடல் மற்றும் குறும்படத்தில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத் துவம் தரப்பட்டுள்ளது. நயினார், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மதுரையில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.
பாஜக தலைவர்கள் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், திராவிடக் கட்சித் தலைவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள். பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த தலைவர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். நயினார் நாகேந்திரன் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.
அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த நயினார், அண்ணாமலை மாற்றப்பட்டு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு பாஜக கூட்டங்களில் அதிமுக தலைவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது வழக்கம். கூட்டங்களில் பேசும்போது எம்ஜிஆர், ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசுவதை நயினார் வழக்கமாக செய்து வருகிறார்.
அதிமுக தலைவர்கள் படங்கள்: மதுரையில் நடந்த பிரச்சாரப் பயணத் தொடக்க விழாவில் அதிமுகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேடையில் பெரிய பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள், பழனிசாமி படம் சிறிய அளவிலும் இடம் பெற்றிருந்தன.
சுற்றுப் பயணத்திற்கு வாழ்த்தி, ‘வாராரு, வாராரு நம்ம தலைவரு, தோளோடு தோளோடு எப்போதும் நிப்பாரு’ என்ற பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் திமுக, காங்கிரஸ் மீதான பிரதமர் மோடியின் விமர்சன பேச்சும், திமுக குடும்ப ஆட்சியைச் சுட்டிக் காட்டிய ஜெயலலிதாவின் பேச்சும் இடம்பெற்றுள்ளது.
குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. ‘பாரதத்தின் விடுதலைக்காக..’ என தொடங்கும் அந்த குறும்படத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், தூத்துக்குடி விஏஓ கொலை, தூய்மைப் பணியாளர் கைது, மடப்புரம் அஜித் குமார் காவல் மரணம், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கின் குற்றவாளி ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருடன் தொடர்புடைய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுகளுடன் கருணாநிதியை விமர்சித்து எம்ஜிஆர் பேசிய வீடியோவும் உள்ளன.
கூட்டணி கட்சியினர் பங்கேற்பு: சுற்றுப்பயண தொடக்க விழாவில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான அதிமுக, பார்வர்டு பிளாக், ஐஜேகே, தமாகா ஆகியோர் தங்கள் கட்சிக் கொடிகளுடன் பங்கேற்றனர். அதிகளவு பொதுமுகவினர் கலந்தனர். அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்எல்ஏக்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் பங்கேற்றனர். அவர்கள் பேசும்போது பழைய பாசத்தில் நயினாரை ‘பண்ணையார்’ என புகழ்ந்தனர்.
உதயகுமார் குறிப்பாக, அதிமுக ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக இருந்த நயினர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் தொழில் துறையில் முன்னேறியுள்ளது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் நயினர் எம்ஜிஆர் பாடலை பாடினார் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். தொடர்ந்து, ‘தமிழகத்திலிருந்து திமுகவை விரட்ட இபிஎஸ் முன்னுரை எழுதியுள்ளார். நான் முடிவுரை எழுதுவேன்’ என குறிப்பிட்டார். மேலும், ‘திமுகவை தோற்கடிக்க எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்’ என டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு கூட்டணியில் சேருமாறு மறைமுக அழைப்பு விடுத்தார்.