“பெண்களை அவமதிக்கும் அதிமுக!” – சி.வி. சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்
“அதிமுகவின் பெண்களை எதிர்க்கும் மனப்பான்மை, வன்மம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. சி.வி. சண்முகம் போன்றவர்கள் அரசியல்வாதியாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; ஒரு மனிதராகவே தகுதி இல்லை. பெண்களை அவதூறாகப் பேசியவர்கள் தங்கள் பதவிகளை இழந்ததற்கான வரலாறு ஏராளம்,” என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“அரசின் இலவச நலத்திட்டங்களை பெண்களுடன் ஒப்பிட்டு கீழ்த்தரமாக பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சி கூட்டத்தில் அவர், ‘தேர்தல் நெருங்கும் போது இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு… கூடவே ஒருவருக்கு ஒரு மனைவியையும் தருவார்கள்’ என பேசினார். இது மிகக் கேவலமான கருத்தாகும்.
திராவிட மாடல் அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது — மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதிகள், சுய உதவி குழுக்களுக்கு கடன் வரம்பு உயர்த்தல், தொழில் முனைவோர் திட்டங்கள் போன்றவை இதற்குச் சான்று.
‘பொண்டாட்டியையும் இலவசமாக தருவார்கள்’ என பெண்களை இலவச நலத்திட்டங்களுடன் ஒப்பிட்டு அவமதித்துள்ள சி.வி. சண்முகம், அதிமுகவின் பெண்களைப் பற்றிய உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதா இருந்த காலத்தில் அவர் இப்படிச் சொன்னிருந்தால், அரசியலிலேயே இருப்பது கடினம் ஆகியிருக்கும். ஆனால் இன்று, எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருப்பது அதிமுகவின் வீழ்ச்சியை காட்டுகிறது.
எடப்பாடி பழனிசாமி முன்னதாக மகளிர் விடியல் பேருந்துகளை ‘லிப்ஸ்டிக் பூசிய பேருந்துகள்’ என அவமதித்தவர்தான். அதேபோல் நடிகை குஷ்பு, பாமக சவுமியா அன்புமணி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பெண்களுக்கு வழங்கப்படும் தொகையைப் பிச்சை போடுவதாகக் கூறி இழிவுபடுத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே மனப்பான்மை கொண்டவர்கள்.
முதல்வர் ஸ்டாலின் மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தும் திட்டங்கள் — மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் — ஆகியவை பெண்களுக்கு பொருளாதாரத் தன்னிறைவை அளிக்கின்றன. இதனால் பெண்களிடம் உருவாகிய பெரும் ஆதரவே அதிமுக கூட்டணியை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது; கல்வியில் பங்களிப்பு அதிகரித்துள்ளது; தொழில்வாய்ப்புகள் பெருகியுள்ளன. இதுவே தமிழ்நாட்டை பெண்கள் பணிபுரியும் எண்ணிக்கையில் நாட்டின் முன்னணியில் நிறுத்தியுள்ளது.
பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் மகளிர் நலத் திட்டங்கள் இன்று இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன — அதற்குச் சான்றாக மத்தியப் பிரதேசத்தின் லட்லி பெஹ்னா யோஜனா, கர்நாடகாவின் கிரகலட்சுமி, மகாராஷ்டிராவின் முதலமைச்சரின் அன்புச் சகோதரி உள்ளிட்ட பல மாநிலத் திட்டங்கள் உள்ளன.
பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் எப்போதும் மக்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவும் அதன் கூட்டணியும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களிடமிருந்து தக்க பதிலடியைப் பெறுவார்கள்,” என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.