காஞ்சிபுரத்தில் மர்மக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமா?

காஞ்சிபுரத்தில் மர்மக் காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சமூக ஆர்வலர்கள், காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க அரசு முனைந்துவிட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரங்கசாமி குளம் அருகே, ஏ.கே.டி. தெருவில் வசித்து வந்த சக்திவேல் மற்றும் சரண்யா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது பெண் குழந்தை கார்த்திகா, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

காய்ச்சல் ஆரம்பித்ததும் தந்தை சக்திவேல் கார்த்திகாவை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பிறகு, கார்த்திகாவின் காய்ச்சல் சரி ஆகும் என தெரிவித்தனர். ஆனால், நேற்று முன்தினம், காய்ச்சல் தீவிரமடைந்தது.

கார்த்திகா மயக்க நிலைக்கு வந்ததால், பெற்றோர் உடனடியாக காரப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்புமாறு அறிவுறுத்தினர். கார்த்திகா சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில மணி நேரம் சிகிச்சை பெற்றிருந்தாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மர்மக் காய்ச்சல் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமா?

மழைக்காலம் தொடங்கிய இந்த நேரத்தில் சிறுமி உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள், காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்தில் கூறியதாவது: “காய்ச்சல் எதனால் வந்தாலும் இயல்பானது. குழந்தை வசித்த பகுதியில் டெங்கு அல்லது தொற்றுநோய் தொடர்பான எந்தவித பாதிப்பும் இல்லை. அந்த பகுதியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதித்தோம். உயிரிழப்பின் காரணம் குறித்து விசாரணை நடக்கிறது” எனத் தெரிவித்தார்.

Facebook Comments Box