கரூர் விபத்து விசாரணை: உயிரிழந்த சிறுவனின் தாய், பெண்ணின் கணவர் வீடியோ கான்பரன்ஸில் ஆஜர்
கரூரில் தவெகா கட்சியின் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், உயிரிழந்த ஏமூர் புதூரைச் சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய் மற்றும் 40 வயது பெண்ணின் கணவர் ஆகியோர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகினர்.
செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெகா கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் ஏமூர் புதூரைச் சேர்ந்த பன்னீர் செல்வத்தின் மகன் பிரித்திக் (9) மற்றும் செல்வராஜின் மனைவி சந்திரா (40) உயிரிழந்தனர். இதுகுறித்து கரூர் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. பின்னர் விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என, பிரித்திக்கின் தந்தை பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவரது மனைவி சர்மிளா, “என் கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னை விட்டு பிரிந்து சென்றவர். மகனின் இறுதிச் சடங்கிற்கே வரவில்லை; பணத்துக்காகவே அவர் சிபிஐ விசாரணை கோரியிருக்கலாம்” என தெரிவித்தார்.
அதேபோல், உயிரிழந்த சந்திராவின் கணவர் செல்வராஜ், “அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விசிகே பாலகிருஷ்ணன், எனது மகனுக்கான வேலை மற்றும் மனைவியின் மரணத்திற்கான நிவாரணத் தொகை வழங்குவது பற்றிக் கூறி எனது கையெழுத்தை பெற்றார்” என தெரிவித்தார்.
இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சர்மிளா, செல்வராஜ் ஆகியோர் கரூரில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகினர்.
அவர்களின் வழக்கறிஞர் தமிழ்முரசு கூறியதாவது: “பசுபதிபாளையம் அலுவலகத்தில் இருந்து இருவரும் வீடியோ கான்பரன்ஸில் கலந்து கொண்டனர். விசாரணையில் செல்வராஜ், ‘நான் மனு செய்யவில்லை; எனது கையெழுத்தை யாரோ போலியாகப் பயன்படுத்தி வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது’ என்றார். சர்மிளா, ‘என் கணவர் 8 ஆண்டுகளாக என்னை பிரிந்துள்ளார்; யாரோ பணத்தாசைக்காக வழக்கு தொடர்ந்திருக்கிறார்’ என்று கூறினார்.”
மேலும், செல்வராஜ் மற்றும் சர்மிளா இருவரும் தங்களுக்கு தனிப்பட்ட வழக்கறிஞர் நியமிக்க சட்டப் பணிகள் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்