கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை உத்தரவுக்கு அரசியல் வட்டாரங்களில் கலவையான எதிர்வினை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
“கரூர் சம்பவத்தில் திமுக அரசு தனது விருப்பப்படி கதைகள் உருவாக்கி, எதிரிகளை குற்றவாளிகளாக காட்ட முயன்றது. இதன் பின்னால் அரசியல் நோக்கம் இருப்பதாக மக்கள் எண்ணி வந்தனர். இப்போது அந்த உண்மை விரைவில் வெளிப்படும்.”
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்ததாவது:
“உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு திமுக அரசுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை. இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் கரூர் சம்பவத்தின் உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.”
பாமக தலைவர் அன்புமணி கூறினார்:
“இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய முதல் கட்சி பாமகதான். இதன் மூலம் மறைக்கப்பட்டுள்ள அனைத்தும் வெளிவரும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை கூறினார்:
“உச்ச நீதிமன்ற தீர்ப்பு, திராவிட மாடல் அரசின் மீது மக்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. இது குற்றவியல் ஆட்சிக்கு நேரடி சவால்.”
மேலும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, வி.கே. சசிகலா ஆகியோரும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
இதற்கிடையில் விசிக எம்.பி. ரவிக்குமார் கருத்து தெரிவித்து,
“விஜய் தரப்பின் மனுவை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, விஜய் பாஜகவின் பிடியில் சிக்கி விட்டார் என பலர் கூறுகின்றனர். பாஜக சொன்னபடியே விஜய் கட்சி தொடங்கினார் என்பதே உண்மை. மகாராஷ்டிரா மாடலில் போல தமிழகத்திலும் அதிகாரத்தைப் பிடிக்க பாஜக முயல்கிறது; அதற்காகவே விஜய் களமிறங்கியுள்ளார்,” என்று தெரிவித்தார்.