மாற்றுத் திறனாளிகளுக்கான கார் ஜிஎஸ்டி சலுகை ரத்து – அன்புமணி கண்டனம்
மாற்றுத் திறனாளிகள் கார் வாங்கும்போது வழங்கப்பட்டு வந்த 10% ஜிஎஸ்டி வரிச் சலுகையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள வலைதள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“உணவுப் பொருட்கள் முதல் வாகனங்கள் வரை பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டதில் மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆனால் அதையே காரணம் காட்டி மாற்றுத் திறனாளிகள் கார் வாங்கும்போது வழங்கப்பட்ட 10% ஜிஎஸ்டி சலுகையை ரத்து செய்திருப்பது கவலைக்குரியது.”
அவர் மேலும் தெரிவித்துள்ளார்:
“ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு முன் மகிழுந்துகளுக்கு 28% வரி வசூலிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் வாங்கும் வாகனங்களுக்கு 10% சலுகை வழங்கப்பட்டு 18% மட்டுமே வரி விதிக்கப்பட்டது. தற்போது சிறிய கார்கள் மீதான வரி 18% ஆக குறைந்துள்ளதைக் காரணம் காட்டி, அந்த சலுகை நீக்கப்பட்டுள்ளது. இது முறையற்றது.”
அன்புமணி மேலும் கூறியுள்ளார்:
“மாற்றுத் திறனாளிகள் கார் வாங்க ஊக்கம் அளிக்கவே இந்த சலுகை வழங்கப்பட்டது. இதை ரத்து செய்வது அவர்களின் உரிமைகளைக் குறைக்கும் நடவடிக்கை. எனவே, இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்று, மாற்றுத் திறனாளிகள் கார் வாங்கும்போது 8% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படுமாறு உறுதி செய்ய வேண்டும்.”