இறந்தவர்களை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக – ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

இறந்தவர்களை அரசியல் கருவியாக்கி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சிறிய அரசியல் நாடகங்களை நடத்தி வருவதாகவும், அதற்கு அதிமுக மற்றும் பாஜக துணைபுரிந்து வருகின்றன என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கரூர் துயரச்சம்பவம் நடந்தவுடன், முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்தவித அரசியலுக்கும் இடமளிக்காமல் உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரே நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதோடு, உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது,”

என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“இவ்விவகாரங்கள் அனைத்தும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தும் வகையில் செயல்படுகின்றன. தன் மகனை இழந்த பன்னீர்செல்வம் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தாலும், அவரது மனைவி வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. தன் குடும்பத்திலிருந்து பிரிந்து தனியே வாழும் பன்னீர்செல்வம், தவெக வழங்கிய நிவாரண தொகைக்காக வழக்கு தொடுத்துள்ளார் என்பதே உண்மை,”

என்றும் பாரதி குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“தன் மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடம், அதிமுக சார்பில் போலியாக கையெழுத்து பெற்று அவரது பெயரில் சிபிஐ விசாரணைக்கான மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், செல்வராஜ் தானே அதை அறியாததாக வெளிப்படையாக கூறியுள்ளார். இதன் மூலம், தவெக மற்றும் அதிமுக இணைந்து கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களை அரசியல் உள்நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகின்றன என்பது உறுதியாகிறது.”

மேலும், திருபுவனத்தில் இறந்த அஜித்குமார் வழக்கில் முன்பு சிபிஐ விசாரணைக்கு எதிராக பேசிய விஜய், தற்போது கரூர் வழக்கில் சிபிஐ விசாரணையை ஆதரிப்பது இரட்டை முகம் எனவும் பாரதி விமர்சித்துள்ளார்.

“ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் காப்பாற்றும் ‘வாசிங் மெஷின்’ பாஜக பின்னால் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள் விஜய்?”

என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இறந்தவர்களின் துயரத்தை அரசியல் நன்மைக்காக பயன்படுத்தும் எதிர்க்கட்சிகளும் புதுக்கட்சிகளும் தமிழ்நாட்டை ஏமாற்றுகின்றன. இது நீதிமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்தும் செயல். இவ்வாறு ஏமாற்று அரசியல் நடத்தும் எடப்பாடி பழனிசாமி போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தக்க பதிலடி பெறுவார்கள்,”

என்று ஆர்.எஸ். பாரதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Facebook Comments Box