தமிழகத்தின் 6 மாவட்டங்களில் போலியோ சிறப்பு முகாம் — அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 2025 இன்று தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற இம்முகாமை, மாநில அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் இணைந்து தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று போலியோ சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் போலியோ தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 29 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் விளைவாக மாநிலம் கடந்த 21 ஆண்டுகளாக போலியோ நோயின்றி உள்ளது. 2004 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் போலியோ இறுதியாக பதிவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த நோய் ஒழிக்கப்பட்டது. இந்தியா அளவில் 2011 இல் மேற்கு வங்கத்தின் ஹவுராவில் கடைசியாக போலியோ வைரஸ் கண்டறியப்பட்டு, 2014 மார்ச் 27 அன்று உலக சுகாதார அமைப்பால் இந்தியா ‘போலியோ விடுபட்ட நாடு’ என்ற சான்றிதழைப் பெற்றது,” என்றார்.
அத்துடன், “அண்டை நாடுகளில் இன்னும் போலியோ பாதிப்பு காணப்படுவதால், இந்தியா போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழு (IEAG) பரிந்துரையின் பேரில், 21 மாநிலங்களின் 269 மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, தமிழ்நாட்டின் 6 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன,” என்றும் தெரிவித்தார்.
இம்முகாம்களில் மொத்தம் 7,091 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 7.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் 27,000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 320 அரசு வாகனங்கள் மூலம் தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளிலும் மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயண வசதி கருதி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மையங்களும் (Transit Booths) அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சினேகா, எம்.எல்.ஏ கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்த் குமாரி கமலக் கண்ணன், மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், துணை மேயர் காமராஜ், மற்றும் பல அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் இறுதியாக,
“அனைத்து பெற்றோர்களும் தங்கள் 5 வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, நோயில்லா இந்தியா இலக்கை நோக்கி ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்,”
என்று கேட்டுக்கொண்டார்.