ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த பாதுகாப்பு மனுவுக்கு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
விலக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரி விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி. சகாயம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுவில் சகாயம் கூறியதாவது:
“மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்தில், கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் என்னை விசாரணை ஆணையராக நியமித்தது. அதன்படி விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டதால் அரசுக்கு சுமார் ₹1,11,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக நான் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அந்த அறிக்கையின் அடிப்படையில், வழக்கு தற்போது மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் 2014 முதல் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டு அந்த பாதுகாப்பு நீக்கப்பட்டது.
இப்போது, பாதுகாப்பு நீக்கப்பட்டதால், கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியாளராக நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு 7 அக்டோபர் 2023 அன்று நான் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மனுவில் கோரிக்கை விடுத்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தமிழக அரசுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கின் மேலான விசாரணையை அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.