பொதுக்கூட்டங்கள் நடத்தும் கட்சிகளிடம் டெபாசிட்: விதிமுறைகள் வகுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்
பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும் முன் அரசியல் கட்சிகளிடம் முன் வைப்பு தொகை வசூலிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க, அக்டோபர் 16 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலித்து அனுமதி வழங்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி, தவெக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த விசாரணையில், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் இழப்பீடு வசூலிக்கும் வகையில், அரசியல் கட்சிகளிடம் முன் வைப்பு தொகை (டெபாசிட்) செலுத்திய பின் அனுமதி வழங்கும் விதிமுறைகளை வகுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இன்று நீதிபதி சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டெபாசிட் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தையும் கேட்க அவகாசம் வேண்டும் என உதவி ஐஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த பிறகே இழப்பீடு வசூலிக்க முடியும், முன்கூட்டியே டெபாசிட் வசூலிக்க சட்டம் வழிவகை செய்யவில்லை என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு நீதிபதி, டிஜிபி அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார். மேலும், முன் வைப்பு தொகை வசூலிக்க தனி சட்டம் தேவையில்லை; நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும் முன் வருவாய் கோட்டாட்சியரிடம் தொகை செலுத்தச் சொல்லலாம். நிகழ்ச்சி முடிந்த பின் அதை திரும்ப வழங்கலாம்; சேதம் ஏற்பட்டால் அதிலிருந்து இழப்பீடு வழங்கலாம் என்றார்.
பின்னர் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, விதிமுறைகள் வகுக்க அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை அக்டோபர் 16-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.