ஆதவ் அர்ஜூனா வழக்கு ரத்து மனு — தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
கரூர் தாவெகக் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜூனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கரூரில் நடைபெற்ற தாவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது. இதையடுத்து தாவெக நிர்வாகிகளை விமர்சித்து, “இலங்கை, நேபாளம் போல தமிழகத்திலும் புரட்சி எழும்” என ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். பின்னர் 34 நிமிடங்களில் அந்தப் பதிவை நீக்கினார்.
இந்த பதிவை பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் வகையிலானது எனக் கூறி, சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனு நேற்று நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மற்றும் கே.எம்.டி. முகிலன் ஆகியோர், “ஆதவ் அர்ஜூனாவின் பதிவு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது; பொதுஅமைதியை குலைக்கும் நோக்கம் கொண்டது” என வாதிட்டனர்.
இதற்கு எதிராக மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “அந்த பதிவு வெறுப்பு பேச்சு அல்ல, கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே. எந்த வன்முறையும் நிகழவில்லை; அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை பின்னர் வழங்க தீர்மானித்தார்.