வாக்காளர் பட்டியல் திருத்தம் தமிழகத்திலும் தேவை – தமிழிசை வலியுறுத்தல்
“தமிழகத்திலும் வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரியை குறைத்து பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக தமிழக அரசு நன்றி தெரிவிக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் நிறைவடைந்து கொண்டிருக்கிறது.
தவெக தலைவர் விஜய் எங்கள் கட்சியை விமர்சிப்பதைவிட திமுக அரசை எதிர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின், முகத்தை கைக்குட்டையால் துடைத்ததாக பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார். அதனை வைத்து அரசியல் செய்வது பொருத்தமல்ல.
பாஜக எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். திமுக கூட்டணியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் தான் அவர்கள் எதிர்க்கட்சிக் கூட்டணியை குறை கூறுகின்றனர்.
ஆனைக்கட்டி வனப்பகுதியில் அத்துமீறல்கள் அதிகமாக நடக்கின்றன. இதற்கு எதிராக பாஜக போராடி வருகிறது. வனவிலங்குகளின் வாழ்விடம் காக்கப்பட வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வழியாகவோ அல்லது வாக்குச்சீட்டு முறையிலோ தேர்தல் நடந்தாலும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும். அதற்காக தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் அவசியமாகிறது” என அவர் வலியுறுத்தினார்.