ராமதாஸ் vs அன்புமணி – பலத்தை காட்ட 100 கார்கள் பின்தொடர வருகை: விழுப்புரத்தில் நடந்தது என்ன?

பாமக உள்ளக அதிகார மோதல் தீவிரமடைந்த நிலையில், தங்களது தனித்தனி பலத்தை வெளிப்படுத்த தலா 100 கார்களில் பின்தொடர்ந்த பவனியில் வந்து, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 வீரர்களுக்கு ராமதாஸும், அன்புமணியும் இன்று (செப்.17) அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக ஆட்சியின்போது வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இணைந்து திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகம் மற்றும் சித்தணி, பார்ப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனூர், கொள்ளுகாரன்குட்டை ஆகிய கிராமங்களில் உள்ள நினைவுத்தூண்களுக்கு மலர் தூவி மரியாதை செய்துவந்தனர்.

பின்னர் வயது காரணமாக, திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்துவதை ராமதாஸ் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தினார். அன்புமணி மட்டும் தொடர்ந்தார்.

இந்நிலையில், பாமகவை தக்கவைத்துக்கொள்ள ராமதாஸும், பாமகவை தன்னிடம் கொண்டுவர அன்புமணியும் கடந்த 9 மாதங்களாக பலத்த சவாலை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, பாட்டாளிகள் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் ராமதாஸ் மீண்டும் செயல்படத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, தைலாபுரத்தில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த ராமதாஸ், பின்னர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள நினைவுத்தூணில் அஞ்சலி செலுத்திய பாமக தலைவர் அன்புமணி, பல ஆண்டுகளுக்கு பிறகு சித்தணி முதல் கொள்ளுகாரன்குட்டை வரை உள்ள தியாகிகள் நினைவுத்தூண்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அவருடன் மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல திண்டிவனத்தில் நடந்த தனியார் மண்டப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்புமணி, 21 பேரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சித்தணி முதல் கொள்ளுகாரன்குட்டை வரை உள்ள நினைவுத்தூண்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். மேலும் விழுப்புரம் பெரியார் சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வழக்கறிஞர் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


போக்குவரத்து பாதிப்பு

பாமக அதிகாரத்தை கைப்பற்ற தந்தை-மகன் மோதலில், தலா 100 கார்களில் அணிவகுத்தனர். நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் அதிக ஒலியுடன் இளைஞர்கள் பின்தொடர்ந்தனர். இதன் விளைவாக விக்கிரவாண்டி – பண்ருட்டி இடையே தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு முதல் கோலியனூர் வரை போக்குவரத்து முடங்கியது. புறவழிச்சாலை வழியாக கனரக வாகனங்கள் மாற்றி அனுப்பப்பட்டன. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்களும் தொலைதூர பயணிகளும் சிரமப்பட்டனர்.


தலைவர்களின் கருத்துகள்

தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்:

“வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் பெறுவோம். பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்றார்.

திண்டிவனத்தில் பேசிய அன்புமணி:

“வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, டிசம்பர் 17ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசு சமூகநீதிக்கு விரோதமான துரோகி. திமுகவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்” என்றார்.

Facebook Comments Box