தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடைபெற விடக் கூடாது – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் நடந்ததைப் போல தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடைபெற விடக்கூடாது; அதனை முன்கூட்டியே தடுப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுகவின் செங்குன்றம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பாபுவின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அவர், பேசும்போது கூறியதாவது:
“தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) தற்போது நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை இந்தப் பணிகள் நடக்கின்றன. இதற்கெதிராக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் மேற்கொண்டோம்; அதனை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது,” என்றார்.
அவர் மேலும் கூறினார்:
“சட்டப்போராட்டம் ஒரு பக்கம் நடக்கிறது என்றாலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஒரு பக்கம் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனை கண்காணிப்பது நமக்குச் சிறப்பான பொறுப்பு. இதற்காக நவம்பர் 11-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.”
ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டதாவது:
“பட்டியல் திருத்தப் பணியில் BLO அதிகாரிகள் வீடுகளுக்குச் சென்று படிவங்களை வழங்கி வருகின்றனர். டிசம்பர் 4க்குள் அவற்றை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் பெயர் சேர்க்காவிட்டால் வாக்கு உரிமை இழக்கும் நிலை ஏற்படும்.
வேலைக்கோ, பிற காரணங்களுக்கோ வீட்டில் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் ஏழை, உழைப்பாளர், கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படலாம்.”
அவர் மேலும் கூறினார்:
“இதற்கான புகார்கள், சந்தேகங்கள் இருப்பின் தேர்தல் ஆணையம் தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. அதோடு, திமுக சட்டத்துறைச் செயலாளர் இளங்கோ மேற்பார்வையில் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் வெளியிட்டுள்ள உதவி எண்ணின் மூலம் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.”
கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் நடந்த வாக்குத் திருட்டு குறித்த ஆதாரங்களை ராகுல் காந்தி வெளியிட்டு வருவதாகவும், அப்படிப் போன்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்படாமல் இருக்க திமுக பூத் ஏஜெண்டுகள் (BLA 2) விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
“தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை காப்பது நமது பொறுப்பு. வருமுன் காப்பதே கடமை,” என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.