ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ-க்கு உடனடியாக ஒப்படைக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், “தமிழக போலீஸ் இந்த வழக்கை நியாயமாக விசாரிக்கவில்லை; எனவே விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு (CBI)க்கு மாற்ற வேண்டும்” எனக் கோரி ஆம்ஸ்ட்ராஙின் சகோதரர் இமானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட ஆவணங்களை உடனடியாக சிபிஐக்கு ஒப்படைக்க தமிழக போலீஸுக்கு ஆணையிட்டது. ஆனால் இதுவரை அந்த ஆவணங்கள் சிபிஐக்கு வழங்கப்படவில்லை.
இதையடுத்து, “ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? சிபிஐ விசாரணைக்கு தடை ஏன்?” எனக் கேட்டு நீதி கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மறைமலை நகர் பாவேந்தர் சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி நிர்வாகி ஜெயந்தி தலைமையேற்றார். பலர் இதில் பங்கேற்று அரசு நடவடிக்கைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.