பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு வைப்புத் தொகை: அரசின் பரிந்துரைகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
திமுக கூட்டணி கட்சிகள், பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வைப்புத் தொகை விதிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
சென்னையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் கட்சிகள் பிரதிநிதிகள் கூறியவை:
- ஆர்.எஸ்.பாரதி (திமுக): ஆயுதமின்றி அமைதியாக கூடும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. ரோடு ஷோக்கள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும் விதிகள் அடிப்படை உரிமைகளை மீறக்கூடாது. வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்ட பிறகு தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.
- டி.ஜெயக்குமார் (அதிமுக): அரசின் பரிந்துரைகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 5 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரையிலான கூட்டங்கள் ஏற்படும். இதை மாவட்ட மற்றும் தாலுகா அளவில் கண்காணிக்க கமிட்டிகள் அமைக்க வேண்டும். பொதுக்கூட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை; தடையிட கூடாது.
- செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): வைப்புத் தொகை முறையை அகற்ற வேண்டும். சிறு கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தும் போது அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள், ரோடு ஷோக்களில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.
- கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): அரசு வரைவு அறிக்கை, ஜனநாயக உரிமைகளை பறிப்பதாகும். வைப்புத் தொகை கேட்பது, கட்டுப்பாடுகள் விதிப்பது, காலம்காலமாக பெற்ற ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக அமையும்.
- மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): கூட்டங்கள் நடத்த விரும்பினால், வைப்புத் தொகையுடன் நடத்த வேண்டும் என வைத்தல், நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதிக்கும்.
- சிந்தனை செல்வன் (விசிக): 50 ஆயிரம் பேர் கூடினால் ரூ.20 லட்சம் வைப்புத் தொகை வைப்பது போன்ற கடுமையான விதிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஜனநாயக நடைமுறைகளை தடுக்கும் விதமாக, காவல்துறை ஆட்சி போல செயல்படக்கூடாது.
- ஜவாஹிருல்லா (மமக): கரூர் நிகழ்வு எடுத்துக்கொண்டு அனைத்து கட்சிகளுக்கும் வைப்புத் தொகை வசூலிப்பது சரியில்லை; ரோடு ஷோக்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
- மவுரியா (மநீம): வைப்புத்தொகை அதிகமாக உள்ளதால் சாதாரண கட்சிகள் அதை ஏற்ற முடியாது. கூட்டத்தின் போது ஏற்படும் தவறுகளுக்கும் கட்சிகள் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், தி.வேல்முருகன் (தவாக), அபுபக்கர் (ஐயுஎம்எல்) உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்