கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணம்
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றியதையடுத்து, பிரவீண்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது. மேலும், காங்கிரஸ் சார்பில் ரூ.2.50 லட்சம், மநீம சார்பில் ரூ.1 லட்சம், விசிக சார்பில் ரூ.50 ஆயிரம் என பல்வேறு கட்சிகள் உதவிகளை அறிவித்தன. தவெக சார்பிலும் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
விஜய் நேரில் வந்து நிவாரணத் தொகை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடம் தொடர்பான சிக்கல் காரணமாக விஜயின் வருகை தள்ளிப்போனது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 31 உயிரிழந்தவர்களில், 27 பேரின் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி (SMS) பாதிக்கப்பட்டவர்களின் செல்பேசிகளில் வந்துள்ளது. மேலும், உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கும் இதேபோன்று நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்தாலும், அந்தக் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தனது இரு மகள்களை இழந்த செல்வராணி கூறியதாவது:
“தவெகவினர் முன்பே எங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டிருந்தனர். நேற்று என் கணக்கில் ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டதற்கான எஸ்எம்எஸ் வந்தது,” என்றார்.
“அனுமதி கிடைத்ததும் சந்திப்பேன்” — தவெக தலைவர் விஜய்
இந்த விவகாரம் குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் விஜய் கூறியதாவது:
“கரூரில் நிகழ்ந்த துயரச்சம்பவத்தில் நம் குடும்பத்தினரை இழந்து வாடும் அனைவருடனும் நாங்கள் உள்ளோம். அவர்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருப்போம். சட்டரீதியான அனுமதி கிடைத்ததும், நேரில் சென்று சந்திப்பேன். இதற்கிடையில், அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சம் வங்கி வழியாக அனுப்பி வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இறைவன் அருளால் இந்தக் கடினமான சூழலை நம்மால் கடந்து வர முடியும்,” என அவர் தெரிவித்துள்ளார்.