டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம்: பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 7 பயங்கரவாதிகள் அதிரடி கைது!
இந்தியத் தலைநகர் டெல்லியில் பெரும் தாக்குதலை நடத்துவதற்காகச் சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 7 பயங்கரவாதிகளை டெல்லி போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தலைநகரில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக டெல்லி உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், டெல்லியின் பல்வேறு முக்கிய இடங்களில் போலீஸார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது, சதித் திட்டத்தில் ஈடுபட்ட 7 தீவிரவாதிகள் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் அனிஸ் தியாகி, மோகித், தீபக் அக்ரொலா, ஆசிப், ஜதன், சபீர் உள்ளிட்ட 7 பேருக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI), நிதியுதவியும் நவீன ஆயுதங்களையும் வழங்கிப் பின்னணியில் இருந்து இயக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பின் நேரடி உத்தரவின் பேரில், டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதலை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் எல்லை வழியாகக் கடத்தல்: ஆயுதங்கள், போதைப்பொருட்கள் பறிமுதல்!
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து பெருமளவிலான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநில சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள், குறிப்பாக டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதக் கடத்தலோடு சேர்த்து, பாகிஸ்தானில் இருந்து பெருமளவிலான போதைப்பொருட்களையும் அவர்கள் இந்தியாவிற்குள் கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 தீவிரவாதிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும், அவர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





