சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் நிர்வாகிகள் விலகல்: அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர், அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்வது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது, சட்டமன்றத் தேர்தலில் கட்சி சந்தித்த தோல்விக்கான காரணங்கள் குறித்தும், சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கட்சிப் பணிகளை எவ்வாறு மீட்டெடுத்து, மீண்டும் தீவிரப்படுத்துவது என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக விவாதித்து, நிர்வாகிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.






