கோவை: டெங்கு காய்ச்சலால் 7 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி – சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை!
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களிடையே சற்றே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த 7 பேரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழைக்காலம் தொடங்கிவிட்டதால், மாவட்டத்தில் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தவும், அதைத் தடுக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அலட்சியமாக இருக்காமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் விடுக்கப்பட்டுள்ளது.






