அடங்க மறுக்கும் ஈரான் – இஸ்ரேல்: போரைத் தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப்! (சிறப்புத் தொகுப்பு)
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் தற்போது மீறியுள்ளது. இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் ஈரான், இந்தத் தாக்குதல்கள் அடுத்த 7 நாட்களுக்குத் தொடரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையப் பகுதி, இஸ்பஹான் மற்றும் தப்ரீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தீவிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இரு நாடுகளும் மாறிமாறித் தாக்கி வருவதால் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இந்தச் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்கா ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை எட்டும் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா இருப்பதால், இஸ்ரேல் எதிர் தாக்குதல்களை நடத்தி அதைத் கெடுக்க வேண்டாம் என நெதன்யாகுவிடம் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை அமெரிக்காவின் பேச்சை மீறி இஸ்ரேல் தனிச்சையாகத் தாக்கினால், அதன்பின் அமெரிக்காவிடமிருந்து எந்தவொரு இராணுவ அல்லது தூதரக உதவிகளையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆரம்பத்தில் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த நெதன்யாகு, பின்னர் ஓரளவுக்கு இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஈரான் போர் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஈரானின் தற்போதைய ஏவுகணைத் தாக்குதல்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால், அது ஈரானுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தையைப் பாதிக்காது எனக் கூறியுள்ளார். அதேநேரம், ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் கடுமையான பொருளாதாரத் தடைகளும், அமெரிக்காவின் தரைப்படைத் தாக்குதலும் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், கள எதார்த்தம் அமெரிக்காவிற்கு சாதகமாக இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஒரு காலத்தில் ஈரானுக்கு எதிராக “அளவுக்கு மீறிய சக்தியைப் பயன்படுத்துவோம்” என்று மிரட்டிய அதிபர் ட்ரம்ப், இப்போது தான் ஏற்படுத்திய குழப்பங்களைச் சரிசெய்ய பாகிஸ்தான் நாட்டின் உதவியை நாடித் திணறி வருகிறார். போருக்கு முன்பே, அதாவது கடந்த பிப்ரவரி 21 அன்றே, “ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடியும், அது அமெரிக்காவை முட்டுச்சந்தில் நிறுத்தும்” என்று சவுதி அரேபியா எச்சரித்திருந்தது. அன்று சவுதியின் குரலை ஆணவத்துடன் நிராகரித்த ட்ரம்ப் நிர்வாகம், இன்று போரில் இருந்து வெளியேற வழிதெரியாமல் தவித்து வருகிறது.
மறுபுறம், அமெரிக்க பாதுகாப்பு மசோதாவின் 224-வது பிரிவின் கீழ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவக் கட்டமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கூட்டு ஆயுத உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு (AI), ட்ரோன்கள் மற்றும் சைபர் தரவுகள் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு நெட்வொர்க் இஸ்ரேல் உளவுத்துறையின் வசம் சிக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்காணிக்கும் ஒரு உளவுச் சாதனமாகவே பென்டகன் இஸ்ரேலைப் பயன்படுத்தி வருகிறது. இது பாதுகாப்பு கூட்டாண்மை என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையை இஸ்ரேல் தன்வசப்படுத்தியுள்ளதையே காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவக் கட்டமைப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதால், இந்த ஈரான் போருக்கான தீர்வு இனி அமெரிக்காவிடமோ அல்லது இஸ்ரேலிடமோ இல்லை; மாறாக, போரில் நேரடியாகப் பங்கேற்காத பிற மத்திய கிழக்கு நாடுகளின் கைகளிலேயே உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.





