தவெகவில் அதிரடியாக இணைந்த மாற்றுக்கட்சி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் – பனையூரில் தள்ளுமுள்ளு!
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில் மாற்று அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களை தவெகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைப்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தவெக தலைமை அலுவலகத்திற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் 10 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணைவதை முன்னிட்டு கட்சி அலுவலகத்தின் முன்பாக ஏராளமான தொண்டர்களும், ஆதரவாளர்களும் திரண்டதால், உள்ளே நுழைவதில் அங்கு திடீரெனப் பெரும் தள்ளு-முள்ளு ஏற்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தவெக அலுவலகத்திற்குள் புதியதாகக் கட்சியில் இணைய வந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் முறைப்படி அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன் உள்ளிட்டோரின் முன்னிலையில் அனைவரும் கட்சியின் கொள்கை உறுதிமொழி எடுத்துக்கொண்டு தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்; புதியதாக இணைந்த அனைவருக்கும் ஆதவ் அர்ஜுனா பொன்னாடை அணிவித்து முறைப்படி வரவேற்பளித்தார்.



