நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் வலுவாகத் தொடர்கிறது: எக்ஸ் தளம் வாயிலாகப் பிரதமர் மோடி பெருமிதம்
புதுடெல்லி: கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் வலுவாக நீடிக்கிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த அசாதாரண ஜிடிபி உயர்வு என்பது நமது பொருளாதாரத்தின் உள்ளார்ந்த பலத்தையும், அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களின் வெற்றியையும், 140 கோடி இந்தியர்களின் அயராத கடின உழைப்பையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறையையும், தொழில் தொடங்குவதற்கானச் சூழலையும் எளிதாக்குவதற்கும், நாட்டின் இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.




