மக்களைக் காக்க வந்த புதிய அரசு மண்ணையும் மரத்தையும் காப்பாற்றும்: ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
சென்னை: சென்னையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடைபெற்ற மரங்கள் நடும் விழாவில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.அருள்பிரகாசம் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய ஷோபா சந்திரசேகர், கடந்த 25 ஆண்டுகளாக ஈசா மூலம் யோகா பயின்று வருவதாகக் குறிப்பிட்டதுடன், மரங்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை என்றும், கவலையான நேரங்களில் மரங்களைக் கட்டி அணைத்தால் புது உற்சாகம் கிடைக்கும் என்றும் உணர்வுபூர்வமாகப் பேசினார். மேலும், மக்களைக் காப்பாற்ற வந்திருக்கும் இப்புதிய அரசு, இந்த மண்ணையும் மரத்தையும் நிச்சயம் காப்பாற்றும் என்று உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தமிழகத்திற்குத் தகுந்த தலைமகனைத் தந்துள்ள ஷோபா சந்திரசேகர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். தற்போதைய தவெக ஆட்சியில் விதிகளை மீறி செயல்பட்ட பல்வேறு கல்குவாரிகள் மூடப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், 2031-ஆம் ஆண்டுக்குள் காடுகளின் நிலப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதோடு பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், கூவம், அடையாறு ஆறுகளை மீட்டெடுத்து காற்று மாசைக் குறைக்க முதலமைச்சர் தீவிர திட்டங்களைத் தீட்டி வருவதாகவும் சபாநாயகர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்





