திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: தமிழக அரசின் நிலை என்னவென்று நீதிமன்றம் அதிரடி கேள்வி!
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் இறுதி முடிவு என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் உத்தரவுகளை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை அப்படியே நடைமுறைப்படுத்த அரசு தரப்பில் முயற்சிக்கலாமே? அதனைச் செயல்படுத்துவதில் அரசுக்கு என்ன நடைமுறைச் சிக்கல் உள்ளது?” எனத் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், “நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது மற்றும் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து அரசின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசித்துவிட்டுப் பதிலளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவில் தமிழக அரசின் தெளிவான முடிவு என்ன என்பது குறித்து முழுமையான விவரங்களைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.




