திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் காங்கிரஸ் தோல்வி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி!
புதுச்சேரி:
தேர்தல் தோல்வி குறித்தும், கூட்டணி அமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்தும் புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தங்களது பலவீனமான தொகுதிகளை வலுக்கட்டாயமாக ஒதுக்கியதால்தான் காங்கிரஸ் தோல்வியைத் தழுவ நேரிட்டது. காங்கிரஸ் கட்சி எளிதாக வெல்லக்கூடிய பல பாரம்பரியமிக்க இடங்களை திமுக கேட்டுப் பெற்றுக் கொண்டது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “கூட்டணிப் பங்கீடு மற்றும் வியூகங்கள் சரியாக அமையாத காரணத்தினால்தான் நம்மால் இந்தத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியைக் கணிசமான அளவில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பிரித்துவிட்டது. மக்கள் தற்போதைய அரசியல் சூழலில் ஒரு நிலையான மாற்றத்தை விரும்பியே தவெகவிற்கு தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். உண்மையில், அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குத் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கவே முழு விருப்பம் இருந்தது” என்ற மிக முக்கிய அரசியல் ரகசியத்தையும் நாராயணசாமி வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்தத் திடீர் விமர்சனம் திமுக – காங்கிரஸ் கூட்டணி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





