திருப்பதி கலப்பட நெய் விவகாரம்: திண்டுக்கல் ஏஆர் நிறுவனம், உரிமையாளர் வீட்டில் இடி சோதனை நிறைவு!
திண்டுக்கல்:
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், திண்டுக்கல்லில் உள்ள பிரபல ஏ.ஆர். டெய்ரி ஃபுட் (A.R. Dairy Food) நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் மத்திய அமலாக்கத்துறையினர் (ED) நடத்திய அதிரடிச் சோதனை தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவன வளாகம் மற்றும் பிள்ளையார் நத்தம் பகுதியில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரின் இல்லம் ஆகிய இரு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் தங்களது சோதனையைத் தொடங்கினர்.
இதில், முதலாவதாக ஏ.ஆர் நிறுவனத்தில் சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தீவிர ஆவணச் சரிபார்ப்பு மற்றும் சோதனை நேற்றிரவு 7 மணி அளவில் நிறைவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, நிறுவன உரிமையாளர் ராஜசேகரின் இல்லத்தில் விடிய விடிய சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனையானது இன்று அதிகாலை வேளையில் நிறைவடைந்தது. இந்த அதிரடிச் சோதனைகளின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க, துப்பாக்கி ஏந்திய மத்திய அதிரடிப் காவல் படையினர் (CRPF) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். லட்டு விவகாரத்தில் பணப்பரிமாற்றம் மற்றும் கொள்முதல் ஆவணங்கள் தொடர்பாகப் பல்வேறு முக்கியக் கோப்புகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.




