கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் – உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கி.மீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல்!
கோடை விடுமுறை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களுக்குச் சென்றிருந்த பொதுமக்கள் ஒரே நேரத்தில் சென்னைக்குத் திரும்பத் தொடங்கியதால், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் (Ulundurpet Toll Plaza) கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தங்கிப் பணிபுரியும் மற்றும் பயிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், தங்களது குடும்பத்தினருடன் கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில், கோடை விடுமுறை முடிவடைந்ததோடு பள்ளிகள் திறக்கும் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் அரசு, தனியார் பேருந்துகள் மூலம் மீண்டும் சென்னையை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
ஜிஎஸ்டி சாலையில் அணிவகுக்கும் வாகனங்கள்: உளுந்தூர்பேட்டை செக்போஸ்ட் மற்றும் சுங்கச்சாவடியை நோக்கி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்தவண்ணம் உள்ளதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலையில் (GST Road) சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
சுங்கச்சாவடியைக் கடக்க நீண்ட நேரம் ஆவதால் வாகனங்கள் அனைத்தும் மிக மெதுவாக, எறும்புகள் ஊர்வது போல ஊர்ந்து சுங்கச்சாவடியைக் கடந்து செல்கின்றன. சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணச் சாவடிகளைத் திறந்து போக்குவரத்தைச் சீரமைக்கவும், நெரிசலைக் குறைக்கவும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் வாகன வருகையால் ஒட்டுமொத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையே தற்போது ஸ்தம்பித்துக் காணப்படுகிறது.





