“மக்கள் முடிவே எனது முடிவு!” – ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை: நாளை மாலை இறுதி முடிவு அறிவிப்பு!
புதுக்கோட்டை:
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், கட்சியில் நீடிப்பதா அல்லது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதா என்பது குறித்துத் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்ட முக்கியச் சந்திப்பினை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முற்றிலும் புறக்கணித்திருந்தார். கட்சித் தலைமையின் தற்போதைய முடிவுகளால் அதிருப்தியில் உள்ள அவர், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவை எடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனது இல்லத்தில் சி.விஜயபாஸ்கர் தனது முக்கிய ஆதரவாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, தொடர்ந்து அதிமுகவிலேயே நீடிக்கலாமா அல்லது தற்போதைய ஆளுங்கட்சியான தவெக-வில் இணையலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் தவெக-வில் இணையலாம் என விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர், “கட்சியைத் தாண்டி எனது தொகுதி மக்களே எனக்கு முக்கியம்; மக்களின் முடிவே எனது இறுதி முடிவு” எனத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ அரசியல் நிலைப்பாடு குறித்த இறுதி அறிவிப்பை அவர் நாளை (மே 29) மாலை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளதால், புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.



