“பெண்கள் பாதுகாப்புக்கான புதிய மைல்கல்” – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு கரும் நீல நிறத்தில் புதிய சீருடை அறிமுகம்!
சென்னை:
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ பெண் காவலர்களுக்கான பிரத்யேகப் புதிய சீருடையைத் தமிழ்நாடு காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் இந்த அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. ஐஜி பவானீஸ்வரி ஐபிஎஸ் (IG Bhawaneeswari) அவர்களின் நேரடித் தலைமையில், 2 எஸ்பிக்கள் (SP) மற்றும் 36 சிறப்புப் பெண் காவலர்களைக் கொண்டு இந்த உயர்தரப் பாதுகாப்புப் பிரிவு தீவிரமாகச் செயல்படத் தயாராகி வருகிறது.
இந்தச் சூழலில், சிங்கப்பெண் அதிரடிப்படை பெண் காவலர்களுக்குக் கம்பீரமான தோற்றத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய சீருடை விபரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன்படி, கரும் நீல நிறத்திலான (Dark Blue) அரைக்கை சட்டை, காக்கி நிற பேண்ட், கருப்பு நிற பெல்ட் மற்றும் கருப்பு நிற ஷூக்கள் அடங்கிய சிறப்புச் சீருடை இப்பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை திரும்பியதும், இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை சீருடை வழங்கும் திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என உயர் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக காவல்துறையின் இந்த புதிய முயற்சி பெண்களிடையே பெரும் வரவேற்பையும், பாதுகாப்பான உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.




