விவசாயக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!
சென்னை:
கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்ற 14 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, குறு மற்றும் சிறு விவசாயிகளுக்குக் கடன்தொகையின் அடிப்படையில் அடுக்குமுறை (Slab system) அடிப்படையில் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ₹50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், சிறு விவசாயிகளுக்கு ₹25,000-மும் தள்ளுபடி செய்யப்படுகிறது. கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க தள்ளுபடி அளவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது:
- ₹60,000 வரை: குறு விவசாயிகளுக்கு ₹40,000; சிறு விவசாயிகளுக்கு ₹20,000.
- ₹70,000 வரை: குறு விவசாயிகளுக்கு ₹30,000; சிறு விவசாயிகளுக்கு ₹15,000.
- ₹80,000 வரை: குறு விவசாயிகளுக்கு ₹20,000; சிறு விவசாயிகளுக்கு ₹10,000.
- ₹90,000 முதல் ₹1 லட்சம் வரை: குறு விவசாயிகளுக்கு ₹10,000; சிறு விவசாயிகளுக்கு ₹5,000.
- ₹1 லட்சத்திற்கு மேல்: குறு மற்றும் சிறு விவசாயிகளுக்குத் தலா ₹5,000 தள்ளுபடி செய்யப்படும்.
மேலும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ₹5,000 தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரை கடன் பெற்ற 14 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைவர் என்றும், இதனால் அரசுக்கு ₹2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




