ரஷ்யா – சீனா இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: டாலருக்கு மாற்றாக சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்ய முடிவு!
பெய்ஜிங்: உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ரஷ்யா மற்றும் சீனா இடையே பல்வேறு முக்கியத் துறைகள் சார்ந்த 20 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, உலகப் பொருளாதார மற்றும் அரசியல் அரங்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான 20 கூட்டு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின்படி, சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கில், இனி இருநாடுகளும் தங்களின் சொந்த நாணயங்களான ரஷ்யாவின் ‘ரூபிள்’ மற்றும் சீனாவின் ‘யுவான்’ ஆகியவற்றின் மூலமாகவே இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. மேலும், சீனாவுக்கு ரஷ்யா வழங்கி வரும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தை கணிசமாக அதிகரிக்கவும், இந்த எரிபொருட்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல இரு நாடுகளுக்கும் இடையே நிலையான புதிய வர்த்தக வழித்தடங்களை அமைக்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இவற்றுடன், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. அதேபோல், ரஷ்யாவின் புகழ்பெற்ற ‘ரொசாட்டம்’ (Rosatom) நிறுவனம், சீனாவில் உள்ள அணுமின் நிலையங்களில் புதிய மின் உற்பத்தி அலகுகளை அமைத்துத் தரும் என்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






