முந்தைய திமுக அரசின் ரூ.2,000 கோடி மின்வாரிய டெண்டர்கள் அதிரடி ரத்து: புதிய டெண்டர் கோர அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது மின்சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்கள் அனைத்தும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், புதிய மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மல்குமார், மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் மற்றும் மின் உற்பத்தி கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அறிவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட டெண்டர்களை உடனடியாக ரத்து செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், ரத்து செய்யப்பட்ட அந்தப் பணிகளுக்குப் புதிய விதிமுறைகளின்படி உடனடியாக மறு டெண்டர் கோர வேண்டும் என்றும், முந்தைய டெண்டர்களை விட முப்பது சதவீதம் குறைவாக விலைப்புள்ளி (Quotations) பெற்று, முறையான தகுதியின் அடிப்படையில் பணி ஆணை (Work Order) வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் அதிரடி ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





